துரித உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து... கிட்னி பத்திரம்...!

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் சிறுநீரக பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணம் என்ன..? சிறுநீரக பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி..? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு உடலில் இருக்கும் உறுப்புகளில் சிறுநீரகத்தின் பங்கு மிக முக்கியமானவை. உடலில் இருக்கும் கழிவுகளை நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணிகளை சிறுநீரகம் மேற்கொண்டு வருகின்றது. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு, மாறிவரும் வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்ப பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. 

இந்தியாவில் தற்போது 100-ல் 10 நபர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக தரவுகள் உள்ளதாகவும், இதில் பலர், தங்களுக்கு சிறுநீரக பாதிப்புகள் இருப்பதையே அறியாமல் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுநீரக பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிறுநீரகக் கல் மற்றும் வேறு சில காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டாலும், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாகவே, 70 முதல் 80 சதவீதம் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக சிறுநீரகவியல் மருத்துவர் ராம் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப கட்டத்திலேயே அறிவதற்கான அறிகுறிகள் இல்லை என்றும், சிறுநீரக பாதிப்புகளில் பெரும்பாலும் உடல் சோர்வு, உடல் எடை குறைவது உள்ளிட்ட பொதுவான அறிகுறிகள் மட்டுமே தென்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் கை, கால்கள் வீக்கம் ஏற்படுவது, மூச்சு திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ரத்த அழுத்தம் ,சர்க்கரை நோய், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்,  சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும், இவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளதா என்பது தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

ஆரம்ப நிலையில் சிறுநீரக பாதிப்புகளை கண்டறிந்தால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் முடியும் எனவும் பெரும்பாலான மக்கள் இறுதிக் கட்டத்திலேயே மருத்துவர்களை, அணுகுவதாகவும் மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்தியாவில் உறுப்பு தானம் செய்வதில் பெரும்பாலான மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் பலருக்கு சிறுநீரகம் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் இளம் வயதிலேயே உயிரிழக்கக் கூடிய நிலையும் காணப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுநீரக பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு, கெமிக்கல் கலந்த துரித உணவுகள் மற்றும் அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை குறைக்க வேண்டும் மற்றும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும், உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறுவுறுத்துகின்றனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் சிறுநீரக பாதிப்புகளின் காரணமாக உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுத்தக்கூடிய நோய்களில் உலக அளவில் இந்தியா மூன்றாம் இடத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனை பொதுமக்கள் எளிதாக எடுத்துக் கொள்ளாமல், சிறுநீரக பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்கள் உரிய மருத்துவர்களை அணுகி முறையான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.

Night
Day