சுட்டெரிக்கும் வெயில்... பார்வை பறிபோகும் அபாயம்... எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

வெயில் காலம் முடியும் வரை தரமான கண் கண்ணாடி மற்றும் குடை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது என தெரிவிக்கும் மருத்துவர்கள், வெறும் கண்களால் சூரியனை பார்த்தால் விழித்திரை பாதிக்கப்பட்டு பார்வை திறன் பறிபோகும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெப்பத்தில் இருந்து கண்களை பாதுகாத்து கொள்ள மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...

தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தாலும், நாம் அனைவரும் முதலில் காப்பாற்ற வேண்டியது கண் மட்டுமே என்கிறது மருத்துவ உலகம்.

இந்த உலகில் உள்ள அனைத்தையும் பார்த்து ரசிப்பது மட்டுமில்லாமல், சிரமம் இன்றி வாழவும் கண் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. அதேபோல் கண்ணில் உள்ள நரம்பு மண்டலம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 

வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் பணிக்கு செல்வோர் பல நேரங்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டபட்ட தலை கவசம் அணியாமல் சாதரண ஹெல்மெட் அணிந்து செல்வதால் கண்களில் சிறிய எரிச்சல் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் வெயில் காலம் முடியும் வரை வெறும் கண்களோடு வீட்டை விட்டு வெளியே வராமல் கண்களில் கண் கண்ணாடி அணிந்தபடி வெளியே வருவது நல்லது என அறிவறுத்துகின்றனர் கண் மருத்துவர்கள்.

மருத்துவர் கூறுவது போல் கண் கண்ணாடி அணிவது கட்டாயம் என்றாலும், சாலையோரம் விற்கப்படும் சாதாரண கண்ணாடிகளை வாங்கி அணியாமல், photochromic glass என கூறப்படும் நிழலில் வெள்ளையாகவும், வெயிலில் கருப்பாகவும் மாறும் கண்ணாடிகளை அணிய வேண்டும் என்றும், கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகள், சூரிய ஒளியை நேரடியாக கண்ணில் படாமல் தடுக்கும் கருப்பு நிறத்திலான சன் கிளாஸ்கள் ஆகியவற்றை மட்டுமே அணிய வேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது. 

வெயில் வாட்டி வதைக்கும் நேரத்தில் சூரியனை வெறும் கண்களில் பார்த்தால் விழித்திரையில் ஓட்டை விழுந்து நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பார்வை திறன் பறிபோகும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கண்களை முறையாக பராமரிக்காவிட்டால், வெயில் காலத்தில் கணினி முன்பு அமர்ந்து பணியாற்றுபவர்கள், இருசக்கர வாகனத்தில் சுற்றும் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றுபவர்கள், உணவு டெலிவரி செய்பவர்கள், பகல் நேரத்தில் தொலை தூர பயணம் மேற்கொள்பவர்களுக்கு, டிரை ஐஸ் எனப்படும் கண்ணில் உள்ள நீர் வற்றி விழித்திரையில், நீர் கவச பிரச்னை உண்டாகி கண்களின் கருவிழி பாதிக்கபடலாமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அதேபோல் கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல், எரிச்சல், நமிச்சல், கண்களில் தண்ணீர் ஊற்றுதல் போன்ற பிரச்னைகள் இருந்தால், கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமெனவும், வெயிலிலிருந்து கண்களை காப்பாற்ற முடிந்த அளவிற்கு இளநீர், வெள்ளரிக்காய், நீர் சத்துள்ள காய்கள், கீரைகள், பழச்சாறுகளை பருகி வந்தால் கண்களில் நீர் வற்றுதல் குறைந்து, வெப்ப தாக்கத்தில் இருந்து கண்களை பாதுகாக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெயிலிலிருந்து தப்பிக்க இடைகாலமாக கண்ணாடிகளை கண்களுக்கு அணிவதோடு நிறுத்திவிடாமல் பூமி வெப்பமடையாமல் பார்த்துகொள்ள மரம் எனும் கண்ணாடியை நாம் அனைவரும் பூமிக்கு வழங்கினால் மட்டுமே எதிர்கால சங்கதிகள் பூமியில் வாழ முடியும் என கருதப்படுகிறது.

Night
Day