எழுத்தின் அளவு: அ+ அ- அ
விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வலது காலுக்கு பதில் இடது காலில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி அருகே உள்ள பெரிய தச்சூர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் பேருந்தில் நடத்துநராக உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வலது கால் முட்டியில் வலி வந்து அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இதனால் நடக்க முடியாமல் தவித்த மாரி முத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களை அணுகியுள்ளார். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துவர சொன்னதால் எடுத்து வந்து மருத்துவர் சரவணனிடம் மாரிமுத்து காண்பித்துள்ளார். வலது முட்டியில் 2 ஜவ்வுகள் கிழிந்துள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்த நிலையில் உள்நோயாளியாக சேர்ந்த மாரிமுத்துவுக்கு கடந்த 30ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின் மாரிமுத்துவை பார்த்த மனைவி தங்கம்மாள் , வலது முட்டிக்கு பதில் இடது முட்டியில் அறுவை சிகிச்சை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மருத்துவர் சரவணனிடம் கேட்டபோது மழுப்பலாகவும் அலட்சியமாகவும் பதிலளித்தார்.வலது காலில் செய்ய வேண்டிய அறுவைச் சிகிச்சையை இடது காலில் செய்து தவறான சிகிச்சையை செய்துள்ள அரசு மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி தங்கம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு மருத்துவமனையில் தனியார் பேருந்து நடத்துனருக்கு அரசு மருத்துவர் செய்த தவறான அறுவைச் சிகிச்சை சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.