7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னை, எண்ணூர், கடலூர் உள்பட 7 துறைமுகங்களில்  மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து, தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் வரும் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக தமிழக வடக்கு கடற்கரைப் பகுதிகளில் தரைக்காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

எனவே, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மீனவ கிராம மக்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்து, சென்னை, எண்ணூர், கடலூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

Night
Day