நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பாக வாலிபர் படுகொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை அறிவித்ததை தொடர்ந்து நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கீழநத்தம் பகுதியில் சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு தொடர்பாக கடந்த 20 ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வந்தபோது ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் பாதுகாப்புக்குக்கு நின்றிருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். நெல்லை மாநகர கிழக்கு காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பிற்காக நின்றிருந்தனர். நீதிமன்றத்துக்கு வரும் ஒவ்வொரு நபர்களும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் செயலாளர் மணிகண்டன் அளித்த பேட்டியில், நெல்லை நீதிமன்றம் முன்பு வாலிபர் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதிமன்றம் சரமாரியான கேள்விகள் கேட்டதால் நீதிமன்றம் முன்பாக பாதுகாப்பு பணியில் போலீசார் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு பணி தொடர வேண்டும் என தெரிவித்தார்.