வடியாத நீரால் அறுவடை செய்ய முடியாத அவலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழையால் விளைநிலங்களுக்குள் மழைநீர் சூழ்ந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளும் முளைக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகையில் மத்திய அரசின் சிபிசிஎல் விரிவாக்க சுற்றுச்சுவரால் விளை நிலங்களுக்குள் மழைநீர் தேங்கி கிடக்கும் கழுகுப்பார்வை காட்சி வெளியாகியுள்ளது. நாகை மாவட்டத்தில் மழை ஓய்ந்து 5 நாட்களாகியும் மழைநீர் வடியாததால் நரிமணம், கோபுராஜபுரம், வெள்ளப்பாக்கம் கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் மழைநீர் வடியாமல் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் மீண்டும் முளைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பனங்குடி கிராமத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் சிபிசிஎல் நிறுவனத்தின் சுற்றுச்சுவரால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நுகர் பொருள் வாணிப கழகத்திலிருந்து அரவைக்காக ரயில் மூலம் குட்ஷெட்டுக்கு கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் லாரியிலேயே முளைத்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சுமார் 36 ஆயிரம் நெல் மூட்டைகள் 120 லாரிகளில் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு குட்ஷெட் பகுதிகளில் கடந்த 17ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் லாரியில் உள்ள நெல் மூட்டைகள் முளைக்க தொடங்கி விட்டதால் வேகன்களில் ஏற்றாமல் லாரிகளிலேயே வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுளளதாக லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆந்திர மாநிலம், கிருஷ்ணபுரம், அம்மம்பள்ளி அணைக்கட்டில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், திருவள்ளூர் அடுத்த சின்ன மஞ்சா குப்பம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 150 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது. பட்டரைப் பெரும்புதூர் பகுதியில் ஆற்றின் நடுவே உள்ள தடுப்பணை நிரம்பி நீர் வெளியேறுவதால் விளை நிலங்களில் தண்ணீர் புகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Night
Day