பல்லு பட்டால் பாய்சன்... மரணம் உறுதி... அச்சுறுத்தும் தெருநாய்கள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் தெருநாய்களின் அதிகரிப்பால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், ரேபிஸ் நோய் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கட்டுக்கடங்காத தெருநாய்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு துளி கூட நடவடிக்கை எடுக்காத விளம்பர திமுக அரசின் அலட்சியத்தால் பொதுமக்கள் சந்தித்து வரும் பெரும் இன்னல்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை மாநகரில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், தெரு நாய்களின் தொல்லையும் சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

சென்னையில் தெருவுக்கு தெரு ராஜாக்கள் போன்று நாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன. சொல்லப்போனால், தெருநாய்களின் கோட்டையாகவே சென்னை மாறவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும், கார்களில் செல்பவர்களையும் தெருநாய்கள் கூட்டமாக துரத்துவதை நாம் எல்லாரும் பார்த்து இருப்பதோடு, நாமும் அதை சந்தித்து இருப்போம். 

இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதனால், நாயிடம் இருந்து தப்பிக்க, பதற்றமடைந்து கீழே விழுந்து வாகனஓட்டிகள் காயமடையும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இரவு நேரங்களில், தனியாக சென்றால் நாய்கள் ஒன்றோடொன்று சண்டை போடுவதும், சாலைகளில் திடீரென்று குறுக்கே வருவதும், நடந்து செல்லும் சிலரை துரத்தி கடிப்பதும் போன்ற சம்பவங்களால்  பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர் பொதுமக்கள். 

அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது தெருநாய்கள் துரத்துவதாகவும், இதனாலேயே வேறு தெருவின் வழியாக செல்லும் நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் தெருநாய்கள் ஒன்றுகூடி சண்டையிட்டு கத்திக்கொண்டே இருப்பதால், நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னை மண்ணடி பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் இருப்பதாகவும், இதுகுறித்து பலமுறை மாநகாரட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று ஆயிரம் கோடி, 2 ஆயிரம் கோடி முதலீடு என விளம்பரம் செய்யும் திமுக அரசு, தெருநாய் தொல்லையில் இருந்து பொதுமக்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. விளம்பர அரசின் இந்த அலட்சியப்போக்கால் தெரு நாய் பிரச்னைகளுக்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும் என்பது தெரியாமல் தினந்தோறும் பயத்தோடவே பொதுமக்கள் நாட்களை கழித்து வருகின்றனர்.

Night
Day