மஞ்சும்மல் பாய்ஸ் மகிமை... குணா குகைக்கு படையெடுக்கும் இளைஞர்கள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு பிறகு கொடைக்கானலில் பெரிதும் கண்டுக்கொள்ளப்படாத குணா குகைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது. காண்போரை பிரமிக்க வைக்கும் இந்த குணா குகையின் பின்னணி என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

மலையாள இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் நண்பர்களின் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். 2000ல் நடந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், சௌபின் ஷாஹீர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 22ஆம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழக ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்படுகிறது. அதற்கு காரணம் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் மையமாக காண்பிக்கப்பட்டுள்ள குணா குகைதான். 

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலில்தான் இந்த குணா குகை அமைந்துள்ளது. 1821ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பி.எஸ்.வார்ட் என்பவர்தான் முதல்முறையாக இந்த குணா குகையை கண்டறிந்துள்ளார். சூரிய வெளிச்சமே படாமல் மிகவும் திகிலூட்டம் வகையில் உள்ள உள்ள இந்த இடத்திற்கு டெவில்ஸ் கிச்சன் அதாவது பேய்களின் சமையலறை என்ற மற்றொரு பெயரும் உண்டு. 

வெகு காலமாக இந்த இடம் கண்டு கொள்ளப்படாத நிலையில், 1990ம் ஆண்டு மீண்டும் கமல்ஹாசனின் குணா திரைப்படத்தின் மூலம் வெளிஉலகிற்கு தெரியவந்தது. குணா படத்திற்காக ஆள் நடமாட்டம் இல்லாத இடம் வேண்டும் என தேடியபோதுதான் இந்த டெவில்ஸ் கிச்சன் குகையை படக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். குகையின் அடிவாரத்தில் அமர்ந்து கமல்ஹாசன் பாடும், கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் 90ஸ்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடலாகும். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்ற வரிகளை கேட்கும்போது, குகையே அதிர்வது போன்ற உணர்ச்சி ஏற்படும். 

குணா திரைப்படத்தின் மூலம் காண்போரை பிரிக்க வைத்த இந்த குகை, அன்று முதல் குணா குகை என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது. 

அடி ஆழத்தில் இருந்து வான் நோக்கி வளர்ந்து நிற்கும் தூண்பாறைகள் தான் குணா குகையின் முக்கிய சிறப்பம்சம். வசீகர அழகு நிறைந்துள்ள குணா குகையில் ஆபத்தும் அதிகம் என்பது சுற்றுலா பயணிகள் செல்லும்போது தெரியவந்தது. 

இந்த குகையில் சில நூற்றாண்டுகளுக்கு முன் பழங்குடியின மக்கள் வசித்ததாக கூறப்படும் நிலையில், இதிலிருந்து அடிக்கடி புகை வெளியேறுவதால் பேய்கள் இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்தது. கொடைக்கானலில் உள்ள மற்ற ஆபத்தான இடங்களில் விழுந்த சிலர் கூட உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் குணா குகையில் விழுந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாக வரலாறே இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வமாக இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதிக பேர் இறந்திருக்க கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குகைக்கு சென்ற சிலர் திரும்பி வரவே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டுதான் மலையாள திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், குணா குகையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளளனர். சுற்றுலா பயணிகளின் வருகையால், குணா குகை பகுதியே களைகட்டியுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Night
Day