பழச கிண்டும் யூடியூப் சேனல்கள்... ஆக்சனில் இறங்கிய அருண் விஜய்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்தை பற்றி தவறான தகவல்களை யூடியூபில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் விஜயகுமார் குடும்பத்தையே கொந்தளிக்க வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கிய  அந்த நபர்கள் யார்? புகாருக்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண்விஜய்.. நடிகர் விஜயகுமாரின் வாரிசான இவர், பாண்டவர் பூமி,, யானை,, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாகியுள்ளார். 

அவரது நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு வெளியான மிஷன் சாப்டர் 1 திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தற்போது, இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் வணங்கான் படத்தின் டீசரும் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கவனம் ஈர்த்தது.

அண்மையில்கூட நடைபெற்ற அருண்விஜய் சகோதரியின் மகள் திருமண விழா விஜயகுமார் குடுபத்தினர் ஆடிப்பாடி மகிழ்ந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை வியக்க வைத்தது.

இந்நிலையில், தனது குடும்பம் குறித்து யூட்யூப் சேனல் ஒன்றில் தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக அருண் விஜய் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, வெள்ளிக்கிழமை அருண் விஜய் சார்பாக வழக்கறிஞர் ராகவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், நடிகர் அருண் விஜய் பற்றியும் அவரது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதுறான வார்த்தைகளை பயன்படுத்தி சினி சமூகம் என்கிற யூ டியூப் சேனலில் கடந்த வாரம் 7 நிமிடம் கொண்ட வீடியோக்களை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

குறிப்பாக தனது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாக எட்டு வீடியோக்களை அந்த யூடியூப் சேனல் வெளியிட்டு இருப்பதாகவும், இதனால் அருண் விஜய் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை பலர் நல்ல விதத்தில் பயன்படுத்தி வரும் நிலையில், ஒரு சிலர் அதிக பார்வையை பெற வேண்டும் என நினைத்து பிரபலங்களை குறிவைத்து அவதூறு கருத்துக்கள் வெளியிடுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Night
Day