ஷாக்+சர்ப்ரைஸ்...! வரலட்சுமிக்கு திடீர் நிச்சயதார்த்தம்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கு திருமண நிச்சயதார்த்தம் பெற்றோர்கள் முன்னிலையில் சத்தமில்லாமல் நடந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பையும், புகைப்படங்களையும் நடிகர் சரத்குமார் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள நிலையில், யார் அந்த மாப்பிள்ளை என்பது குறித்து தற்போது பார்க்கலாம்...

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி... நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளான இவர், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். 

தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம்வேதா, சண்டகோழி 2, 'சர்கார்', 'மாரி 2', 'இரவின் நிழல்' படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். இதில் சர்கார், சண்டக்கோழி 2 ஆகிய 2 படங்களில் வில்லியாக நடித்ததன் மூலம் அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றார் வரலட்சுமி சரத்குமார். அதுமட்டுமின்றி, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்மா ரெட்டி, கொன்றால் பாவம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தெலுங்கில் நடித்த அனுமன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் 50வது படமான ராயனில் வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

பல ஆண்டுகளாக திருமணம் பற்றிப் பேசாமல் இருந்து வந்த வரலட்சுமி, தற்போது, திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளது, ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பையில் ஆர்ட் கேலரி தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை வரலட்சுமி சரத்குமார் மணமுடிக்க உள்ளார். இவ்விருவருக்கான திருமண நிச்சயதார்த்தம், கடந்த 1ஆம் தேதி மும்பையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் இருவரின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். உற்றார் உறவினர்கள் முன்னிலையில் வரலட்சுமி சரத்குமாரும் நிகோலய் சச்தேவும் மோதிரம் மாற்றிகொள்ள இனிதே திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நிறைவு பெற்றுள்ளது.

நிகோலய் சச்தேவுக்கு வரலட்சுமிக்கும் இருந்து வந்த 14 ஆண்டுகால நட்பு, காதலாக மலர்ந்து தற்போது திருமண நிச்சயத்தில் முடிந்துள்ளது. இவ்விருவரின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிர்களும், திரைத்துறையினரும் வரலட்சுமி சரத்குமார் - நிகோலய் சச்தேவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Night
Day