நெல்லையில் ஒரு கிளாம்பாக்கம்... அவசரகதியில் திறப்பு... அலறவிட்ட நீதிமன்றம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியால், கடந்த மாதம் திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தால் அரசு அதிகாரிகளுக்கு வில்லங்கம் ஏற்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், உள்ளிட்ட துறைகளின் அனுமதி பெறாமல் பேருந்து நிலையம் திறந்தது குறித்து விளக்கமளிக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...

நெல்லை மாநகரின் பழைய பேருந்து நிலையம் என்றழைக்கப்படும் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம், கடந்த 2018 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ், வணிக வளாகங்கள் மற்றும் பார்க்கிங் வசதியுடன் நவீன பேருந்து நிலையமாக சுமார் 80 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்தது.

கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. கட்டிடம் தரம் தொடர்பாகவும்,  சுகாதாரம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட எந்த துறையின் அனுமதியும் பெறாமல், அவசர கோலத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பேருந்து நிலையம் திறந்து கொண்டிருந்தபோதே, இதன் முதல் மாடியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் கூரையின் சிறிய பகுதி திடீரென இடிந்து கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக கடந்த 16ஆம் தேதி ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. அப்போது பேட்டி அளித்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன், முறையாக அனுமதி பெறாமல் பேருந்து நிலையம் திறக்கப்படுவதாகவும், இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

அதன்படி பெர்டின் ராயன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, பேருந்து நிலையம் அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டது தொடர்பாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், நெல்லை மாநகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் உள்ளிட்ட 12 பேர் நான்கு வார காலத்திற்குள்  விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

இதன் மூலம் திருநெல்வேலி மாநகராட்சிக்கு சொந்தமான பெரியார் பேருந்து நிலையத்தில் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மாநகராட்சி நிர்வாகமே எந்த அனுமதியும் பெறாமல் பேருந்து நிலையத்தை திறந்துள்ளதால், அதிருப்தியடைந்துள்ள சமூக ஆர்வலர்கள், மக்களுக்கு ஒரு நீதி, தமிழக அரசுக்கு ஒரு நீதியா எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Night
Day