மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், புத்தூர், ஆச்சாள்புரம், எடமணல், திருவெண்காடு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், பழைய பேருந்து நிலையம் அருகே மழைநீர் தேங்கியதால் தீபாவளியை முன்னிட்டு தரக்கடை அமைத்த நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் வேதனையடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதேபோல், சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் பல்லாவரம் குரோம்பேட்டை அனகாபுத்தூர் சேலையூர் உங்கிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார் பகுதியில் பெய்த மழையால் நரசிங்கபுரம் சந்தை திடல் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூகஆர்வலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, சின்ன காஞ்சிபுரம், டோல்கேட், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம்
அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று கரு மேகங்கள் சூழ்ந்து வந்து மழை பெய்தது. பன்னீர்செல்வம் பூங்கா, பேருந்து நிலையம், கருங்கல்பாளையம், சம்பத் நகர், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான கோபிசெட்டிபாளையம், கவுந்தப்பாடி, பவானி, சித்தோடு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், தீபாவளிக்கு ஜவுளி வியாபாராம் செய்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமயால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து ஓடியது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் தேங்கி மழைநீரை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல், தாசில்தார் அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகத்திற்கு வந்த மக்களும் தேங்கிய மழைநீரால் அவதியடைந்தனர். அப்பகுதியில் முறையாக கால்வாய் வசதி இருந்தும், நகராட்சி நிர்வாகம் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.