எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூரைச் சேர்ந்த மனோன்மணிக்கும், திருச்சியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தம்பதியினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனோன்மணி தனது கணவரிடம் கோபித்துவிட்டு தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மகளை சமாதானப்படுத்தி குடும்பத்தினர் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து, மனோன்மணியை தொலைபேசி மூலம் குடும்பத்தினர் தொடர்புகொண்டபோது அவர் எடுக்காததால், நேரடியாக வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் சோபாவில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், உடலை வாங்க மறுத்தும், தங்களது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியும், மருமகனையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி பாதிக்கப்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.