உச்சத்தில் தீண்டாமை கொடுமை... சலூன் கடையில் முடி திருத்த மறுப்பு...

எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் அருகே பட்டியலின மக்களுக்கு முடித் திருத்தம் செய்யக் கூடாது என கிராம மக்கள் சார்பில் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி முடி வெட்ட மறுத்த சலூன் கடைக்காரா் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தொடரும் தீண்டாமை வன்கொடுமை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த திருமலைபட்டி, காமராஜர் காலனியை சேர்ந்தவர் அருண்பாண்டியன். பட்டியலின வகுப்பை சேர்ந்த இவர், தனது குடும்பத்துடன் கடந்த 33 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் தனது மகன்களுக்கு முடிதிருத்தம் செய்ய தெவ்வாய்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள சிட்டு சலூனுக்கு சென்றுள்ளார். 

ஆனால் சலூன் கடையின் உரிமையாளர் பட்டியலின வகுப்பை சேர்ந்த உங்களுக்கு இங்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என ஊர் கட்டுப்பாடு இருப்பதாகவும், தான் முடி திருத்தம் செய்தால் இங்கு கடையை நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருண்பாண்டியன், முடித்திருத்தம் செய்யச்சொல்லி சலூன் கடை உரிமையாளரிடம் வலியுறுத்தியும் அவர் இறுதி வரை குழந்தைகளுக்கு முடித்திருத்தம் செய்யவில்லை.

இந்த நிலையில் அருண்பாண்டியன் தனது மகனுடன் சலூன் கடைக்காரிடம் முடித்திருத்தம் செய்யச்சொல்லி வலியுறுத்தும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்பகுதியில் உள்ள சலூன் கடைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற நிகழ்வுகள் காலம் காலமாக நடைபெற்று வருவதாக வேதனை தெரிவித்த அருண்பாண்டியன், இந்த தீண்டாமை சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சலூன் கடை உரிமையாளர் முத்துவை கைது செய்தனர். மேலும் கட்டுப்பாடு விதித்ததாக செல்வராசு மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோரையும் கைது செய்தனர்.

Night
Day