எழுத்தின் அளவு: அ+ அ- அ
நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46.
சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி திரைப்படத் துறைக்கு வந்த ரோபோ சங்கர் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அஜித்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் புலி, தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக உடல் மெலிந்து காணப்பட்ட ரோபோ சங்கர் சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் நீர்ச்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
தொடர்ந்து அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை 4.30 மணி அளவில் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.