எழுத்தின் அளவு: அ+ அ- அ
நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரோபோ சங்கரின் மறைவையொட்டி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார். திரைப்படத் துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நகைச்சுவைக் கலைஞராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்பட்ட ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். திரைத்துறையில் ஏராளமான சாதனைகளை படைத்திருக்க வேண்டிய ரோபோ சங்கர் இளம் வயதில் நம்மை விட்டு பிரிந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
ரோபோ சங்கர் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் உனது வேலை நீ போனாய் எனது வேலை தங்கிவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிம்பு எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரோபோ சங்கர் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ளார். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இழந்துவிடுவது மிகுந்த வேதனை என்றும் அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு என்றும் கூறியுள்ளார். நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும் என்றும் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டு, குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், காலப்போக்கில் ஏற்படும் அழிவுகரமான தேர்வுகள் ஆரோக்கியத்தை எவ்வாறு சிதைக்கின்றன என்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு சிறந்த திறமை மிக விரைவில் போய்விட்டது என்றும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் கார்த்தி பதிவிட்டுள்ளார்.