எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை மாநகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டிகளுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அவர்லாண்ட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்களுக்கும் அவர்லாண்ட் நிறுவனத்திற்கும் மோதல் போக்கு நிலவி வந்ததாக தெரிகிறது.
அவர்லாண்ட் நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி ஐந்து நாட்களாக பணிகளைப் புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் பணிக்கு திரும்பினர்.
இதையடுத்து 500-க்கும் மேற்பட்ட வாகனங்களின் சாவிகள், டீசல் டேங்குகள், பதிவு புத்தகங்கள், பிற முக்கிய ஆவண ஆதாரங்களை எடுத்துக் கொண்டு தளவாடங்களை சேதப்படுத்தியதாக 28 பேர் மீது அவர்லாண்ட் நிறுவனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சம்பந்தபட்ட நிறுவன ஊழியர்கள், தூய்மை பணியாளர்களை சாதியைச் சொல்லி திட்டியதாக தொழிற் சங்கத்தினரும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்த 23 தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியை நீக்கம் செய்து அவர்லாண்ட் நிறுவனம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை கண்டித்து ஏராளமான தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டிகளுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த விவகாரத்தால் மாநகரப் பகுதி முழுவதிலும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளன.