தமிழக மக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றுவர போதுமான அரசு பேருந்து மற்றும் ரயில் வசதிகளை ஏற்படுத்தி தர திமுக தலைமையிலான அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுவரும் நிலையில் அதற்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்திட தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் அதற்கான நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுக்க வேண்டிய பொறுப்பு ஒரு நல்ல அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் - ஆனால் ஆளும் கட்சியான திமுக தமிழக மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதை விட்டுவிட்டு தங்கள் கட்சியை எப்படி வலுப்படுத்துவது என்ற ஒரே சிந்தனையில் மாநாடு நடத்துவதும், நகர்வலம் செல்வதில் மட்டும் கவனம் செலுத்தி வருவதும் தமிழக மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும் என புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையிலும், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி போன்ற பண்டிகைகளுக்கான விடுமுறை தினங்கள் வரும் நிலையிலும், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிட போதுமான பேருந்து வசதிகளை உறுதி செய்திடும் வகையில், அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பேருந்துகள் ஏற்கனவே விடுமுறை காலங்களில் சாமானிய மக்களிடம் அடிக்கும் கட்டண கொள்ளையை தடுக்க முடியாமல் திமுக தலைமையிலான அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் டீசல் செலவு மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து பயண கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என தனியார் பேருந்து சங்கங்கள் திமுக தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கின்றன - எனவே, பண்டிகை தினம் வரை வேடிக்கைப் பார்க்காமல் உடனடியாக ஆம்னி பேருந்து உள்ளிட்ட தனியார் பேருந்துகளின் பயண கட்டணங்களை முன்கூட்டியே நிர்ணயம் செய்து அதனை சரியாக கடைபிடிக்கின்றனரா? என்பதனை தொடர்ந்து ஆய்வு செய்திடவேண்டும் என கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 8 ஆயிரத்து 182 புதிய பேருந்துகள் வாங்கப்போவதாக ஆணை பிறப்பித்ததோடு சரி- அதனை செயல்படுத்தவில்லை என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் வருடத்திற்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய பேருந்துகள் வாங்க வேண்டிய நிலையில், திமுக ஆட்சிக்காலமே முடியும் நிலையில், மொத்தமாக வெறும் 3 ஆயிரத்து 700 பேருந்துகள் வாங்கினால், அது எப்படி மக்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை என புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடியே 70 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர்- மேலும், பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து மட்டும் சுமார் 5 முதல் 6 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 21 ஆயிரம் பேருந்துகள் எந்தவிதத்தில் போதுமானதாக இருக்கும் என்பதை திமுக அரசு கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அதிலும் தற்போது இயக்கத்தில் இருக்கும் பேருந்துகளில் சுமார் 60 சதவிகிதத்திற்கும் மேல் சரிவர பராமரிப்பு இல்லாமல் இயங்கி கொண்டிருக்கும் பழைய பேருந்துகள் தான் - அதுவும் ஏதோ தெய்வ அருளால் ஓடிக்கொண்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, சென்னைக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேருந்துகள் தேவைப்படும் நிலையில், இன்றைக்கு வெறும் 4 ஆயிரம் பேருந்துகள்தான் ஓடிக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 10 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன - ஆனால், திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் ஏன் வாங்கமுடியவில்லை? அதற்கான எந்த செயல் திட்டத்தையும் இந்த ஆட்சியாளர்களால் ஏன் வகுக்கமுடியவில்லை? என கேள்வி எழுப்பியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, போக்குவரத்துத் துறை அமைச்சரோ சட்டசபையில் அறிவிப்பு கொடுப்பதோடு சரி, எதுவும் செய்வதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு பேருந்துகளில் விளம்பரத்தின் மூலமும் வருவாய் வரும் நிலையில், மக்களுக்கு எந்த பயனும் இல்லை - இதற்கு மேல் இந்த விளம்பர அரசு, மகளிருக்கு இலவசம் என அறிவித்தார்கள் - அறிவிப்பு மட்டும் வெளியிட்டால் போதுமா? மகளிர் இலவச பேருந்துகள் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, இன்றைக்கும் மகளிர் இலவச பேருந்து கிடைக்காமல் தமிழக பெண்கள் சாலையில் காத்துக்கிடக்கின்ற அவல நிலைதான் உள்ளது - மேலும், எப்பொழுதாவது வரும் பேருந்துகளும் பராமரிப்பில்லாத தரமற்ற பேருந்துகளாக இயக்கப்படுவதால் பயணிகள் தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கின்ற அவலநிலை உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரை திருமங்கலம் பகுதியில் பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த மகளிர் விடியல் அரசு பேருந்தின் படிக்கட்டுகள் உடைந்து விழுந்ததில் பள்ளி மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர்- திமுக தலைமையிலான அரசு, தனியார் வேன்களை மினி பேருந்துகளாக இயக்கிக் கொள்ளலாம் என்ற ஒரு அறிவிப்பை செய்துள்ளது- அதிலும் இதுபோன்ற அறிவிப்புகளை மக்கள் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் இருக்கும் போது முதன்மை செயலாளர் ஏன் அறிவிக்கிறார் என்று தெரியவில்லை என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறிப்பாக மலைப்பிரதேசங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்- அப்படி இருக்கையில் வேன்களை மினி பேருந்துகளாக மாற்றுவதன் மூலம் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக புரட்சித்தாய் சின்னம்மா வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டும் இதேபோன்று எந்தவித முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு கடைசியாக தீபாவளி நேரத்தில் தனியார் பேருந்துகளை அரசு ஒப்பந்த பேருந்துகள் என ஸ்டிக்கர் ஒட்டி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் தார்மீக உரிமையை தட்டிப் பறித்தது இந்த திமுக தலைமையிலான தொழிலாளர் விரோத அரசு என புரட்சித்தாய் சின்னம்மா விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கும் நிலையில், திமுக தலைமையிலான அரசு வீண் பேச்சுக்களை குறைத்துக்கொண்டு, மக்கள் நலனை மறந்து, தங்கள் கட்சி நலனில் மட்டும் அக்கறை காட்டிவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனே மத்திய அரசிடம் அனுப்பி, பண்டிகை காலங்களில் தமிழகத்திற்கு கூடுதலாக தேவைப்படும் ரயில் போக்குவரத்து சேவையை பெற முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் பண்டிகை காலங்களில் பன்மடங்கு பயண கட்டணத்தை உயர்த்துகின்ற ஆம்னி தனியார் பேருந்துகளில் அதிக பணம் செலவழித்து சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத சாமானிய மக்களுக்கு, அதிகமான ரயில் சேவைகள் கிடைத்தால் பயனுள்ளதாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைமையிலான அரசு தங்களது ஆட்சியின் இறுதி காலத்தை எட்டி இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு போதுமான எண்ணிக்கையில் அரசு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர தவறிவிட்டது- திமுக தலைமையிலான அரசு தனது நிர்வாகத்திறமையின்மையால் ஐந்து வருட ஆட்சிக்காலத்தை வீணடித்ததுதான் மிச்சம் என புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, பண்டிகை காலம் நெருங்குவதால் போதுமான எண்ணிக்கையில் அரசு பேருந்துகளை இயக்கிடவும் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளின் பயண கட்டணத்தை நிர்ணயித்திடவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.