இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிக்க ஆசை... அராஜக பேர்வழியை குண்டாசில் கைது செய்க...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருகே விவசாயிகளின் நலன் கருதி, தங்கள் நிலத்தில் வழிவிட்ட விவசாய குடும்பத்தினர் மீது ஊராட்சி மன்ற தலைவரின் தலைமையிலான வில்லன்கள் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர்... இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிக்க ஆசை என்ற ரீதியில் நல்லவர்களுக்கு உபத்திரவம் செய்த ஊராட்சி மன்ற தலைவர் கணவரின் அராஜகம் பற்றி சற்று விரிவாக காணலாம்...

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தேவராயன்பாளையம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த குமார், சாமிக்கண்ணு, சுதாகர் ஆகிய மூவரும் தங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் 16 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்...

விவசாய நிலத்தின் முன்பகுதியில் சகோதரர்கள் மூவரும், அருகருகே வீடு கட்டி வசித்து வருகின்றனர்...

இவர்களது நிலத்தை தாண்டி 10க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய நிலங்கள் உள்ளன. மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் நலன் கருதி, சகோதரர்கள் மூவரும் தங்கள் நிலம் வழியாக விவசாய பொருள்கள் ஏற்றி செல்ல பாதையை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்...

முதலில் விவசாய பொருட்கள் கொண்டு செல்லவும், ஏர் உழும் டிராக்டர்களை கொண்டு செல்லவும் அந்த பாதையை பயன்படுத்திய விவசாயிகள், கடந்த சில ஆண்டுகளாக தங்கள் விவசாய நிலங்களை செங்கல் சூளையாக மாற்றியுள்ளனர்...

தேவராயன்பாளையம் ஊராட்சிமன்ற தலைவரின் கணவரான அராஜக பேர்வழி செல்வம் மற்றும் மாசிலா, குப்பன், முருகன் அண்ணாதுரை ஆகியோர் செங்கல் சூளைகளை வைத்து வெயிட்டாக கல்லாக கட்டி வருகின்றனர்...

தனக்கு சொந்தமான நிலத்தை வேறொருவருக்கு அராஜக பேர்வழி செல்வம் லீசுக்கு விட்ட நிலையில், அங்கு செங்கல் அறுக்கும் எந்திரத்தை நிறுவி மிகப்பெரிய அளவில் செங்கல் வியாபாரம் நடைபெற்று வருகிறது...

நாள் தோறும் புழுதி பறக்க செல்லும் லாரிகள், ஜேசிபி ஆகியவற்றால் தங்கள் விவசாய கிணறு பாதிக்கப்படுவதை எண்ணி, தங்கள் நிலத்தில் வழிவிட்ட மூன்று சகோதரர்களும் வேதனை அடைந்தனர்...

தங்களால் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், சகோதரர்கள் மூவரும், கடலாடி காவல் நிலையத்தில் கடந்த மாதம் 13 ஆம் தேதி புகார் அளித்துள்ளனர்...

வழக்கம் போல காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடு ஒன்று, அராஜக பேர்வழி செல்வத்துக்கு புகார் வந்தது பற்றி தகவல் கசிய விட்டுள்ளது...

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான செல்வம், கடந்த 25 ஆம் தேதி, சகோதரர்களில் நிலத்தில் விளைந்திருந்த நெற்கதிர்களை அழித்து ஜேசிபி இயந்திரம் மூலம் மேலும் பாதையை விரிவுபடுத்தி உள்ளனர்.

அப்போது சகோதரர்கள் மூவரும் வீட்டில் இல்லாத நிலையில் அவர்களது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் ஜேசிபி எந்திரத்தை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்...

அவர்கள் அனைவரும் தான் அழைத்து வந்திருந்த பெண் கூலிப்படையினரை வைத்து அடித்து உதைத்த அராஜக பேர்வழி செல்வம், சகோதரர்களின் வீட்டுக்கு முன் 5 அடி ஆழம், 200அடி நீளத்துக்கு பள்ளம் தோண்டி வில்லங்கத்தனம் செய்துள்ளார்...

இதனால் நல்லது செய்த மூவரின் குடும்பத்தினரும், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது... 

குழந்தைகள் பள்ளிக்கு செல்லமுடியாமல், கால்நடைகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படாமல் பட்டினியாக இருந்த நிலையில், தங்கள் கால்நடைகள் மற்றும் குழந்தைகளுடன், தோண்டப்பட்ட பள்ளத்தில் அமர்ந்து சகோதரர்கள் மூவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்...

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், சமரச பேச்சுவார்த்தை நடத்தி ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி தீர்வை தேடி தந்தனர்...

செங்கல் சூளை நடத்தி கொள்ளை லாபம் பார்ப்பதற்காக அடுத்தவர் நிலத்திலும், வீட்டுக்கு முன்பும் அராஜகத்தில் ஈடுபடும் செல்வம் போன்றோர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து இரும்புக்கரம் கொண்டு போலீசார் ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது...

Night
Day