"எங்களது சாபம் முதல்வர் ஸ்டாலினை சும்மா விடாது" - தூய்மை பணியாளர்கள் கதறல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்தி நள்ளிரவு கைதானவர்களை விடுவிக்காமல் போலீசார் அராஜக போக்கோடு செயல்படுவதாக பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.‌ மேலும், தங்களது சாபம் முதலமைச்சர் ஸ்டாலினை சும்மா விடாது என்றும் சாடியுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டம் நடத்தியதாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணி வாய்ப்பு இழந்த தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்திய தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். இதுவரையில் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உணவு அளிக்காமலும், விடுவிக்காமலும் காவல்துறையினர் அராஜக போக்கோடு செயல்படுவதாக தூய்மை பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், வெளியே விட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவார்கள் என்பதால் தூய்மை பணியாளர்களை வெளியே விடாமல் காவல்துறையினர் அடைத்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேபோல் சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம் நடத்திய 130 தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல், அண்ணா அறிவாலயம் அருகே போராட்டம் நடத்திய 327 தூய்மை பணியாளர்கள் என மொத்த 600-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள்  மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 600-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ள தூய்மை பணியாளர்கள், தங்களின் சாபம் முதலமைச்சர் ஸ்டாலினை சும்மா விடாது என கதறியுள்ளனர். மேலும், தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்தான், புத்தாண்டில் தாங்கள் வாழ்வதா சாவதா என்பதை முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர். 


varient
Night
Day