"புயல்கள் உருவாக வாய்ப்புகள் மிகவும் அதிகம்" - சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினம் பகுதியில் 15 சென்டிமீட்டர் மழையும், திருச்செந்தூரில் 13 சென்டிமீட்டர் மழையும் பதிவானதாக தெரிவித்தார். மேலும் கடந்த அக்டோபர் 1 முதல் தமிழகத்தில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் இது இயல்பை விட 37 சதவீதம் அதிகம் எனவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், வரும் 18ஆம் தேதி தென்கிழக்கு அரபி கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கேரள, கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார். மேலும் இதேபோல், வரும் 24ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வலுவடைய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். 

குறிப்பாக புயல்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் உள்ளது என்றும், எத்தனை புயல்கள் உருவாகும் என்பதை தற்போது கணிக்க முடியாது எனவும் அமுதா கூறினார்.

தொடர்ந்து பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா, அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழக கடற்கரை பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகள்,  தெற்கு ஆந்திரா, கேரள கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்தார்.

Night
Day