எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை பெரம்பூரில் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மூன்றாம் ஆண்டு மாணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் பெரம்பூர் தீட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த மாணவர் யோகராஜும் காதலித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய யோகராஜ், விருந்து கொடுப்பதாகக் கூறி பெரம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள விடுதிக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், குளிர்பானத்தில் மதுபானங்களை கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மயக்கம் தெளிந்து வீட்டுக்கு சென்ற மாணவி, பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து பெற்றோர், பெரம்பூர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லூரி மாணவர் யோகராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.