எழுத்தின் அளவு: அ+ அ- அ
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக ஆந்திரா சென்றுள்ள பிரதமர் மோடி, ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்லா தேவஸ்தானத்தில் சாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநிலம் கர்னூலில் 13 ஆயிரத்து 430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார். இந்த பயணத்தின் முதல் கட்டமாக நந்தியால் மாவட்டம் ஸ்ரீசைலம் சென்ற பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் எஸ். அப்துல் நசீர், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அங்குள்ள ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்லா தேவஸ்தானத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர், பூஜைகளிலும் கலந்து கொண்டார். பிரதமர் மோடியின் சாமி தரிசனத்தின் போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உடனிருந்தனர்.
சாமி தரிசனத்தை தொடர்ந்து ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்கு பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரா என்பது சத்ரபதி சிவாஜி மகாராஜின் மரபை மதிக்கும் ஒரு வழிபாட்டு மற்றும் சமூக நல அமைப்பு ஆகும். 1974ம் ஆண்டு நடைபெற்ற சிவாஜி மகாராஜின் முடிசூட்டு விழாவின் 300வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இது அமைக்கப்பட்டது.