தீபாவளி பண்டிகை : இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. 

தீபாவளிப் பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வசதியாக இன்று முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு மொத்தம் 20 ஆயிரத்து 378 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

அந்த வகையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2092 பேருந்துகளுடன் கூடுதலாக 5900 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களும் சேர்த்து 14,268 பேருந்துகளும் பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என ஒட்டு மொத்தமாக 20,378 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.   

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து  இன்றைய தினம் 760 பேருந்து இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதேபோல மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.   

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை நலன் கருதி 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Night
Day