ரஜினி பட பாடலுக்கு முட்டுக்கட்டை... பிரச்சனை கிளப்பும் இசைஞானி....

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் தனது பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என தயாரிப்பு நிறுவனத்துக்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தனது பாடல்களை பயன்படுத்தக்கூடாது என,  அந்த படத்தில் நடித்த முன்னனி நடிகர்களுக்கும் கூட இளையராஜா தொடர்ந்து பிரச்சனை கொடுத்து வருவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்திற்கான டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில், தனது பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் இளையாராஜா தரப்பில், பட தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் தியாகராஜன் அனுப்பியுள்ள அந்த நோட்டீசில், நடிகர் ரஜினியின் கூலி படத்தின் டீசரில், தங்கமகன் படத்தில் இடம் பெற்றிருந்த 'வா வா பக்கம் வா' என்ற பாடலை உரிய அனுமதி பெறாமலும், ராயல்டி செலுத்தாமலும் பயன்படுத்தியிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வா வா பக்கம் வா பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி, இளையராஜா தான் பாடலுக்கு முழு உரிமையாளர் என்பதால், முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நோட்டீசில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கமலஹாசன் நடித்த விக்ரம் 2 படம் மற்றும் ஃபைட் கிளப் படத்திலும் இளையராஜாவின் பாடல்களை முறையான அனுமதி பெறாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த நோட்டீசில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கமல் நடித்த விக்ரம் 2 திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றபோது, வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவு போட்ட  இளையராஜா, தற்போது, விக்ரம் 2 படத்தில் முறையாக அனுமதி பெறாமல் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ரஜினி, கமல் நடித்த பெரும்பான்மையான படங்களுக்கு  இசையமைத்தவர் இளையராஜாதான்.அப்படி இருக்க இளையராஜா அந்த படங்களின் பாடல்களுக்கு உரிமையை கொண்டாடுவதால்  ரஜினி,கமல் ஆகியோர் தாங்கள் நடிக்கும் மற்ற படங்களில் ஏற்கனவே தாங்கள் நடித்த படங்களின் பாடல்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாகவே தாங்கள் நடிக்கும் படங்களில் இளையராஜாவை இசையமைக்க ரஜினி, கமல் ஆகியோர் அனுமதிப்பதில்லை. அந்த வகையில்  1994 ஆம் ஆண்டு வெளியான வீரா திரைப்படத்திற்கு பிறகு கடந்த 30 வருடங்களாக ரஜினியின் படங்களுக்கு இளையராஜா இசையமைப்பதில்லை. அதேபோல் நடிகர் கமல் நடித்த விருமாண்டி திரைப்படத்திற்கு பின் இளையராஜாவிற்கு அவர் படத்தில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

பாடல் உரிமை குறித்து அனைவரிடம் பணம் கேட்கும் இளையராஜாவின் செயலை நக்கலடிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் அவரை நேரடியாகவே கலாய்த்திருப்பார். அந்த நிகழ்ச்சியில், இளையராஜா தன்னிடம் பணம் இல்லை என தெரிவிக்கும் விதமாக சரஸ்வதி போல் லஷ்மி இல்லை எனக்கூற, அதற்கு பதிலளித்த ரஜினி, "பணம் வருவதற்குதான் இப்போ எதுவோ செஞ்சி இருக்கீங்களே", "அதுல வருது இல்ல" என காப்பி ரைட்  பிரச்சனை குறித்து களாய்த்திருப்பார். 

அதேபோல் கமல்ஹாசனிடம் நீங்க சொல்லிதான் வயலினை இசையை அப்படி போட்டோனா என இளையராஜா கேட்க, "எல்லாத்தையும் நீங்களே வச்சிகிட்டா எப்படி, நாங்களும் கொஞ்சம் வச்சிக்க வேண்டாமா" என கமல்ஹாசன் கிண்டல் செய்திருப்பார்.
 
இதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு தான் கம்போஸ் செய்த பாடல்களை அனுமதி இல்லாமல் உபயோகித்தால், காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார். நெருங்கிய நண்பரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி மட்டுமின்றி அவர் குழுவில் இடம்பெற்றிருந்த பாடகி சித்ரா, சரண் உள்ளிட்டோருக்கும் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. 

திரைத்துறையில் பொதுவாக பிரபலமடைந்த பாடல்களை மற்ற திரைப்படங்களிலோ, இசைக்கச்சேரிகளிலோ பயன்படுத்துவது நடைமுறையில் உள்ள ஒன்றாகும். ஆனால் இளையராஜா மட்டும் அதனை பெரிது படுத்தி வரும் நிலையில், தற்போது, உலகளவில் பெரும் ரசிகர்களை கொண்டுள்ள ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்திற்கும் காப்புரிமை தொடர்பாக இளையராஜா பிரச்சனை ஏற்படுத்தி இருப்பது திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Night
Day