மண் பொன்னா மாறுமா... ரூ.7 லட்சம் அபேஸ் செய்த மாடர்ன் மாந்திரீகன்!

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தங்கம் மற்றும் வைர புதையல் எடுத்து தருவதாக கூறி ஒரு பெண்ணிடம் 7 லட்சத்து 12 ஆயிரம் பணத்தை ஏமாற்றிய போலி மாந்திரீகவாதி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யபட்டனர். புதையல் என கதை விட்டு பணத்தை ஏமாற்றிய மாந்திரீகவாதி தான் விரித்த வலையில் தானே வந்து சிக்கி கொண்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவரது மனைவி விமலா. இவருக்கு ராஜசேகர், கார்த்தி, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். விமலா-விவேகானந்தன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

விமலாவின் தம்பி ரஞ்சித்குமார் செங்கல்சூலை நடத்திவந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஜோதிடரை அழைத்து பரிகார பூஜை நடத்தினால் கஷ்டம் தீரும் என உறவினர் யாரோ சொல்ல விமலாவும் ரஞ்சித்குமாரும் எடப்பாடி தாலுகா, கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர். அவரோ முதலில் கை மேல் பணம் தந்தால் மட்டுமே பூஜை செய்வதாக கூறி காரார் காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த மார்ச் மாதம் முதலில் 21 ஆயிரம் ரூபாயும், பிறகு 11 ஆயிரம் ரூபாயும் என சுரேஷ்குமாரின் வங்கி கணக்கில் விமலா செலுத்தி உள்ளார். பிறகு நேரில் வந்து பூஜை நடத்த வந்த சுரேஷ் குமார், உங்கள் வீட்டில் புதையல் உள்ளது என்றும் 11 வகையான நவபாஷனங்களை குறிப்பிட்ட இடத்தில் தெளித்தால் மட்டுமே அந்த புதையலை எடுக்க முடியும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்காக சில லட்சங்களை செலவு செய்தால் லம்பா பணம் கிடைக்கும் என மன கணக்கு போட்ட விமலா, சுரேஷ்குமார் கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார்.

இறுதியாக 11 வகையான நவபாஷனங்களை தருவதாக கூறி கொல்லிமலைக்கு அழைத்துசென்ற சுரேஷ் குமார் 5 லட்சத்தை பேசி வாங்கியதாக கூறப்படுகிறது.

எவ்வளவு நாள் தான் அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என கூறி பணம் பறிக்க முடியும் என எண்ணிய மாந்திரீகவாதி சுரேஷ்குமார், இந்த கதையின் மாந்தீரிகம் ஃபைனல் டச்சை முடித்து விட்டு கிடைப்பதை சுருட்டி கொண்டு திரும்பி பார்க்காமல் கிளம்பி விட வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதன்படி பழைய பானைகள், சொம்பு, பாத்திரம் ஆகியவற்றில் புதையல் நிரப்பியுள்ளதாகவும் அதனை 24 அமாவாசைக்கு பூஜை செய்து திறந்து பார்த்தால் தங்கம் வைரம் இதில் இருக்கும் என்றும் மீறி நடுவில் திறந்து விட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என மிரட்டிவிட்டு தனது உதவியாளர் சரவணுடன் அங்கிருந்து சாமார்த்தியமாக தப்பியுள்ளார் சுரேஷ்குமார்...

மாந்திரீகவாதி சொன்னதை நம்பிய விமலாவும் சிறிது நாட்கள் பூஜை செய்ய செய்ய மனதில் லேசாக சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தாலும் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமா என அச்சம் இருந்த போதும் மன தளராமல் மஞ்சள் துணியால் மூடிஇருந்த பொருட்களை திறந்து பார்த்தார் விமலா. அப்போது அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. உள்ளே மண்ணை நிரப்பி சுரேஷ் குமார் தங்களை ஏமாற்றி விட்டு சென்றது புரிய வந்தது. 

இப்படி ஏமாற்றப்பட்டு 7 லட்சத்தை இழந்து விட்டோமே என வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் மோசடி பேர்வழிகளுக்கு நிச்சயம் பாடம் புகட்ட வேண்டுமென நினைத்த விமலா, மாந்திரீகவாதி சுரேஷ்குமார் கற்று கொடுத்த பாடத்தை அவருக்கே திரும்ப சொல்லி கொடுக்க நினைத்து அவரது உதவியாளரை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் இந்த முறை வேறு ஒரு நண்பர் குடும்பத்தினருக்கு இதே போல பூஜை செய்ய வேண்டும் என கூறி அவர்கள் காட்டிய ஆசை படத்தை அவர்களுக்கே போட்டு காட்டி வீட்டிற்கு வரவழைத்தார் விமலா. அதனை நம்பி எலி பொறியில் சிக்குவது போல் தனது உதவியாருடன் தானாக வந்து சிக்கியுள்ளார் சுரேஷ்குமார்.

முன்கூட்டியே வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்த போலீசார் சுரேஷ் குமாரையும், சரவணனையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Night
Day