கோவையில் பெண் கடத்தல் - காவல் ஆணையர் விளக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே கோவை இருகூர் அருகே பெண் கடத்தப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் இருகூர் தீபம் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை காரில் வந்த மர்ம நபர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து காருக்குள் அமர்த்தி சென்றதாக கூறப்படுகிறது. காரில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதால், அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வெள்ளை நிற காரில் இருந்து 2 நபர்கள் இறங்கி பெண்ணை இழுத்துச் சென்று காரில் கொண்டு செல்லும் வீடியோ பதிவாகி இருந்தது தெரியவந்தது. மேலும் காரில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காரை விரட்டிப் பிடிக்க முயன்றும் முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அப்பெண் கடத்தப்பட்டாரா? அல்லது குடும்பப் பிரச்சனை காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவியில் இளம்பெண்ணின் அடையாளம் சரிவர தெரியாததாலும், கடத்தப்பட்ட காரின் பதிவு எண், உரிமையாளர் விவரங்களை கண்டறியவும் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

இதனிடையே, இளம்பெண் கடத்தப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சி பரவி வரும் நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கம் அளித்துள்ளார். இதுவரை பெண் காணாமல் போனதாக எந்த ஒரு புகாரும் வரவில்லை என்றும், சூலூரில் இருந்து வந்த கார் ஒன்று இருகூர் வழியாக சென்றபோது, ஒரு காரில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாக மட்டுமே தகவல் தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்தார். வாகனத்தின் பதிவு எண் எந்த ஒரு இடத்திலும் தெளிவாக புலப்படவில்லை என்பதால் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

Night
Day