சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து! உணவகம் காரணமா... கொலை முயற்சியா...

எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சாப்பிட்ட உணவில் பூச்சி மருந்து கலந்திருப்பது தெரியவந்துள்ளது. உணவில் ஏற்கனவே பூச்சி மருந்து இருந்ததா? அல்லது சாப்பிடும் முன் கலக்கப்பட்டதா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் ஹோட்டல் கருணாநிதி என்ற பெயரில்  உணவகம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சைவம், அசைவம் என இரண்டு வகையிலும் இங்கு உணவுகள் பரிமாறப்பட்டு வருகின்றன. இந்த உணவகத்தை நாமக்கல்லை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் நடத்தி வருகிறார். இதற்கிடையே நாமக்கல் அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த பகவதி என்ற கல்லூரி மாணவர் அந்த உணவகத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உள்ளார். பின்னர் 7 சிக்கன் ரைஸ் பார்சல்களை வீட்டிற்கு வாங்கி சென்றுள்ளார். 

அந்த சிக்கன் ரைஸை பகவதியின் தாய் நதியா, தாத்தா சண்முகநாதன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சாப்பிட்டு உள்ளனர். உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில், நதியா மற்றும்  சண்முகநாதனுக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர் முருகன் ஆகியோர்  சம்மந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை பரிசோதனை செய்தனர். மேலும், தினசரி எத்தனை வாடிக்கையாளர்கள் வருகிறார்கள், சமைப்பதற்கான இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் எங்கு வாங்கப்படுகிறது, மீதான உணவுகள் என்ன செய்யப்படுகிறது என்பது குறித்தும் உணவக உரிமையாளரிடம் தீவிரமாக விசாரித்தனர். இதனையடுத்து, சம்மந்தப்பட்ட உணவத்திற்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவு படி உணவுத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

உணவகத்தில் அன்றைய தினம் ஏராளமானோர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவரின் மகன் மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சாப்பிட்ட நிலையில் நதியா மற்றும் முதியவர் சண்முகநாதனுக்கு மட்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதற்கிடையே அவர்கள் சாப்பிட்ட சிக்கன் ரைஸை, ஆய்வுக்காக சேலத்தில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நதியா மற்றும் சண்முகநாதன் சாப்பிட்ட சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இத்தனை பேர் சாப்பிட்ட நிலையில், இரண்டு பேர் சாப்பிட்ட சிக்கன் ரைஸில் மட்டும் பூச்சி மருந்து வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்த நிலையில், யாரேனும் அவர்களை கொல்ல பூச்சி மருந்தை கலந்து கொடுத்தனரா? அல்லது தற்கொலை செய்து கொல்வதற்காக அவர்களே பூச்சி மருந்து கலந்து சாப்பிட்டார்களோ என்பது போலீசாரின் தொடர் விராசணையில் தான் தெரியவரும்.

Night
Day