போதைப் பொருள் வழக்கு - விசாரணை தீவிரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கியிருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

நுங்கம்பாக்கத்தில் போதை பொருள் விற்பனை செய்ததாக கடந்த வாரம் பிரசாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,பிரசாத்தின் நண்பரான பிரதீப் குமார் என்பவர் பெங்களூருவில் வசித்து வரும் நைஜீரியாவை சேர்ந்த  ஜீரிக் என்பவரிடம் இருந்து கோக்கைன் என்ற போதைப்பொருளை வாங்கி சென்னையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரதீப் குமார் மற்றும் கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் நைஜீரியாவை சேர்ந்த ஜீரீக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும், பிரதீப்பிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் வாங்கி பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. குறிப்பாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதை பொருள் பயன்படுத்தியதாக நேரடியாக பார்த்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து நடிகர் ஸ்ரீகாந்துக்கு சம்மன் அனுப்பட்ட நிலையில், நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் அவர் ஆஜரானார். பின்னர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார், அவருக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முடிவில் கோக்கைன் வகை போதை பொருளை ஸ்ரீகாந்த் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கியிருந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Night
Day