நடிகர் ராஜேஷ் காலமானார்

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. 

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ராஜேஷ், பாலச்சந்தர் இயக்கத்தில் அவள் ஒரு தொடர்கதை மூலம் 1974ல் திரையுலகில் முதன் முதலாக அறிமுகமானார். அந்த ஏழு நாட்கள் உட்பட இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கதாநாயகனாக மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிகர் ராஜேஷ் நடித்துள்ளார். மேலும், பல படங்களுக்கு பின்னணி குரலும் பேசியுள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாது, சின்னத்திரையில் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான அவர், நடிகராக மட்டுமல்லாமல் தொழில் அதிபராகவும், ஜோதிட ஆய்வாளராகவும் வலம் வந்தார். 

கடந்த 45 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வந்த நடிகர் ராஜேஷ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில், சென்னை ராமாபுரத்தில் வசித்து வந்த ராஜேஷுக்கு இன்று காலை குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து மறைந்த நடிகர் ராஜேஷின் உடல், ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, திரையுலகத்தினர், முக்கிய பிரமுகர், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ராஜேஷின் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் ராஜேஷின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கனடாவில் உள்ள அவரது மகள் வரும் சனிக்கிழமை இந்தியா வரவுள்ளார். அதன்பின்னரே ஞாயிற்றுக்கிழமை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day