எழுத்தின் அளவு: அ+ அ- அ
வாழ்க்கையில் சந்தித்த எல்லா பிரச்னைகளிலும் தன்னுடன் இருந்த கெனிஷா, அழகான துணை என்று நடிகர் ரவி மோகன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவித்தார். இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளநிலையில், பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக சேர்ந்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரவி மோகன் பங்கேற்றது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ரவி மோகனின் மனைவி ஆர்த்தி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் கூறும் விதமாகவும், மனைவி ஆர்த்தியை பிரிவதற்கான காரணம் குறித்து நடிகர் ரவி மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இத்தனை வருடங்களாக ஆர்த்தி தன்னை முதுகில் குத்தியதாகவும், இப்போது தன் நெஞ்சில் குத்தியற்காக சந்தோஷப்படுவதாகவும் ரவி மோகன் தெரிவித்துள்ளார். பொன் முட்டையிடும் வாத்தாக தன்னை ஆர்த்தி பயன்படுத்தியதாகவும், தன்னை கணவராகக் கூட மதித்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது மாமியாரின் பல கோடி ரூபாய் கடனுக்கு தன்னை ஜாமீன் தாரராக கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றதாகவும், ஆர்த்தி செய்த மதிப்பிட முடியாத செலவுகள் தான் தனது கடன் பிரச்சினைக்கு காரணம் எனவும் ரவி மோகன் தெரிவித்துள்ளார். மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளதாகவும், மகன்களை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது மகன்கள் இருவரையும் பார்க்கவிடாமல் தன்னை தடுத்து வருவதாகவும், பண ரீதியாக ஆதாயமடைய தனது மகன்களை பயன்படுத்த முயற்சிப்பதாகவும், நடிகர் ரவி மோகன் குற்றஞ்சாட்டி உள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய போது தனக்கு துணையாக நின்றவர் கெனிஷா பிரான்சிஸ் என்றும், கெனிஷா பிரான்சிஸ் அழகான துணை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் சந்தித்த எல்லா பிரச்னைகளிலும் தன்னுடன் இருந்தவர் என்றும் ரவி மோகன் கூறியுள்ளார். இவையே தன்னுடைய திருமணம் வாழ்க்கை தொடர்பாக வரும் இறுதி அறிக்கை என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.