இடிக்கப்படும் உதயம் தியேட்டர் பெருந்தொகை கைமாறியது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையின் அடையாளமாகத் திகழும் உதயம் தியேட்டர் விரைவில் இடிக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ரசிகர்களின் இதயங்களை நொறுங்கச் செய்துள்ளது. அந்த தியேட்டர் அமைந்துள்ள இடத்தை, ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று பெருந்தொகைக்கு வாங்கியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம். 


உதயம் தியேட்டர்ல என் இதயத்தை தொலச்சேன் என்ற பாடல் மூலம், தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் உள்ள பாமர மக்களிடமும் பிரபலம் அடைந்த தியேட்டர் தான் உதயம். அதேபோல் சுயம்வரம் என்ற திரைப்படத்திலும் ஒரு பாடல் காட்சி, உதயம் தியேட்டர் வளாகத்தில் படமாக்கப்பட்டது. சினிமாக்களை திரையிடும் அதேவேளையில், திரைப்படங்களிலும் உதயம் தியேட்டரின் முக்கியத்துவம் இன்றி அமையாததாக இருந்தது. உதயம் தியேட்டரில், உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என பல்வேறு பெயர்களில் 4 ஸ்கிரீன்கள் உள்ளன. அசோக் பில்லர் அருகே ஜாஃபர்கான் பேட்டை பகுதியில் உள்ள உதயம் தியேட்டர் 1983ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 40 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த தியேட்டர் பழமை மாறாமல் அப்படியே இருந்த காரணத்தாலும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வரவாலும் கலை இழக்கத் தொடங்கியது. 

கொரோனாவுக்கு பின்னர் தியேட்டர்களுக்கு மக்கள் வருகை மிகவும் குறைந்தது. அதிலும் குறிப்பாக பழமையான தியேட்டர்களுக்கு செல்வதை விட மக்கள் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு செல்லவே அதிகளவில் ஆர்வம் காட்டி வந்தனர். உதயம் தியேட்டரும் காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை சந்திக்காமல், அப்படியே விடப்பட்டது. இதனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. இதனால் வேறுவழியின்றி அந்த தியேட்டர் உரிமையாளர் அதை விற்க முடிவெடுத்து, முன்னணி கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளார். இதுமட்டும் அல்லாமல், தியேட்டர் அமைந்துள்ள இடத்திற்கு அருகிலேயே மால் ஒன்றும் கட்டப்பட்டு வருவதால், இனி தியேட்டருக்கு மக்களின் வரத்து அதிகமாக இருக்காது என்ற காரணத்தால், அதை விற்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. 

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் வியாபார ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உதயம் திரையரங்கை வாங்கிய கட்டுமான நிறுவனம் அங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் சமீபகாலமாக தியேட்டர்கள் இடிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. அண்மையில், சென்னையில் உள்ள சாந்தி திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. அதேபோல் அபிராமி மெகா மாலும் இடிக்கப்பட்டு, அங்கு தியேட்டருடன் கூடிய குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது உதயம் தியேட்டரும் இணைந்துள்ளது. அசோக் நகரில் சுமார் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த தியேட்டர் தற்போது மூடுவிழா கண்டுள்ளதால் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். 

Night
Day