அமீர் அப்செட்... வெற்றிமாறன் சைலன்ட்... நெருக்கும் விசாரணை வளையம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் நண்பர்களான திரைப்பட இயக்குனர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறனிடம், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரைப்பட பிரபலங்களை சுழன்றடித்து வரும் இந்த போதைப்போருள் கடத்தல் விவகாரம் குறித்து சற்று விரிவாக காணலாம்...

கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி டெல்லியில் 50 கிலோ மெப்பட்ரோன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னையை சேர்ந்த முகேஷ், ரகுமான் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகியோரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபல தயாரிப்பாளரும் திமுகவின் மேற்கு மாவட்ட அயலக அணி துணை செயலாளராக இருந்த ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து ஜாபர் சாதிக் தலைமறைவான நிலையில், அவரது வீட்டிற்கு சீல் வைத்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், முக்கியமான ஆவணங்களையும் பறிமுதல் செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  

இதனிடையே ஜாபர் சாதிக்கிற்கு நெருக்கமான நண்பர்களான இயக்குனர்கள் அமீர், வெற்றிமாறன் ஆகியோரிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் தன்னை தொடர்பு படுத்தி வீடியோ மற்றும் செய்திகள் வருவது வருத்தமளிப்பதாக இயக்குநர் அமீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த மாதிரியான செய்திகளால் தனது பெயருக்கு களங்கத்தையும், தனது குடும்பத்திற்கு மன உளைச்சலையும்தான் ஏற்படுத்த முடியுமே தவிர, வேறு எந்த பலனும் இல்லை என அமீர் தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசியுள்ள இயக்குநர் அமீர், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக காவல் துறையினர் தன்னை எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். 

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ள நிலையில், பிரபல இயக்குனர் வெற்றிமாறன், இதுதொடர்பாக எந்த விதமான அறிக்கையும் விடாமல் அமைதியாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளராகவும் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்த ஜாபர் சாதிக், இயக்குனர்களுக்கு தெரிந்துதான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக இயக்குனர்கள் அமீர், வெற்றிமாறன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Night
Day