ரயில் மார்க்கமாக வந்த போதை பொருள்... ஒரு கிராம் ரூ. 7 லட்சம்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டையே உலுக்கிவரும் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தொடர்புகள் இருப்பதும், அவர்கள் போதைப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் போதை பொருள் புழக்கத்தால், தமிழகம் போதை பொருள் கூடாரமாக மாறி வருகிறதோ என்ற அச்சம் தமிழக மக்களிடையே நிலவி வருகிறது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள குடோன் ஒன்றில் சோதனை மேற்கொண்ட டெல்லி சிறப்பு போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ மெப்பட்ரோன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கடத்தல் சம்பவத்திற்கு திமுக பிரமுகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரை டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்த தேடியபோது, அவர்கள் தலைமறைவாகினர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழகத்தில் அடுத்தடுத்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் இருந்து நெல்லை செங்கோட்டைக்கு ரயில் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக D.R.I. எனப்படும் மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை இயக்குனரக, மதுரை யூனிட் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டெல்லியில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற அவரை, DRI அதிகாரிகள் பின் தொடர்ந்தனர்.

அப்போது மதுரை ரயில் நிலையத்தில் பிரகாஷ் இறங்க முற்பட்ட போது அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் இருந்து ட்ராவல் பைகளில் 30 கிலோ எடையிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, பிள்ளமன் பிரகாஷிடம் நடத்திய 7 மணி நேர விசாரணையில், அவர் சென்னை கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 

அவரது வீட்டிலும் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றனர். அதற்குள் கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் போதை பொருட்கள் வீசப்பட்டதை விசாரணை மூலம் அதிகாரிகள் அறிந்தனர். 

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சோதனை செய்ததில், அங்கிருந்து 6 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை அதிகாரிகள் மீட்டனர். 

பிரகாஷிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொத்த போதை பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூபாய் 180 கோடி முதல் 200 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இந்த மெத்தபெட்டமைன் போதை பொருள்களை கடல் வழியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. தமிழகத்தை மையமாக வைத்து போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா என்ற அடிப்படையில் மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். 

இதனிடையே மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தமிம் அன்சாரி என்பவரது வீட்டிலும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் மட்டுமே அதிக அளவில் புழக்கத்தில் உள்ள இந்த வகை போதைப்பொருள், தற்போது தமிழகத்திலும் நுழைந்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தொடர்புகள் இருப்பதும், அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழக மக்களிடையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. அத்துடன், விளம்பர திமுக ஆட்சியில் போதைப் பொருள் கடத்தலின் தலைநகராக தமிழகம் உருவாகிவிட்டதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

varient
Night
Day