"அய்யா எங்கள மன்னிச்சிடுங்க" - தேசிய விருதுகளை திருப்பி கொடுத்த திருடன் 13-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற படைப்புகளுக்குச் சொந்தக்காரரான இயக்குநர் மணிகண்டனின் வீட்டில் அண்மையில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. மணிகண்டன் பெற்ற தேசிய விருது பதக்கங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். தற்போது, அந்தப் பதக்கங்களை மீண்டும் மணிகண்டனின் வீட்டில் வைத்த கொள்ளையர்கள் உருக்கமான மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் விட்டுச் சென்றுள்ளனர். இந்த சுவாரசிய சம்பவம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை, விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை, விதார்த் நடித்த குற்றமே தண்டனை, மற்றும் கடைசி விவசாயி ஆகிய 4 திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றவர் இயக்குநர் எம்.மணிகண்டன். இவர் இயக்கிய 4 படங்களில், காக்கா முட்டை, கடைசி விவசாயி ஆகிய திரைப்படங்கள், இவருக்கு தேசிய விருதுகளைப் பெற்றுக் கொடுத்தன. தற்போது புதிய படத்திற்கான வேலைகளில் இவர் ஈடுபட்டுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட மணிகண்டன் எழில் நகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, குடும்பத்துடன் மணிகண்டன் வெளியில் சென்றிருந்த போது, 8ஆம் தேதி இரவு, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 5 சவரன் தங்க நகைகள் மற்றும் தேசிய விருது பதக்கங்களை ஆகியவற்றை திருடிச் சென்றனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திடீர் திருப்பமாக, கொள்ளையர்கள் மனம் திருந்தி, தேசிய விருது பதக்கங்களை மட்டும் மணிகண்டனின் வீட்டில் வைத்து விட்டுச் சென்றுள்ளனர். வீட்டு வாசலில், கேட் அருகே பாலிதீன் கவர் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதை எடுத்து பார்த்த போது உள்ளே தேசிய விருதுக்கான பதக்கங்களும் ஒரு கடிதமும் இருந்தது. அந்தக் கடிதத்தில் அய்யா மன்னித்து விடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு என எழுதப்பட்டிருந்தது. ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 5 சவரன் நகைகளை வைத்துக் கொண்ட கொள்ளையர்கள், தேசிய விருதுக்கான பதக்கங்களை மட்டும் திரும்பக் கொண்டு வந்து வைத்திருப்பதால், கொள்ளைச் சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது. இயக்குநர் மணிகண்டனின் உழைப்பை புரிந்து கொண்டு, பதக்கங்களை ஒப்படைத்த நேர்மையான திருடர்கள், அவரது உழைப்பில் சம்பாதித்த பணத்தையும், நகைகளையும் விரைவில் இதுபோல் வைத்து விடுவார்கள் என நம்புவோம்.

Night
Day