எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக உள்ள தனது மகனை ஜெயிலர்கள் தாக்கி சித்ரவதை செய்வதாகவும், மகனை எப்படியாவது காப்பாற்றுங்கள் என தாய் கண்ணீர் மல்க காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், வில்லாபுரம் பகுதியை சேர்ந்த முனியசாமி, அங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஹரிஹரசுதன். இவர், கடந்த 2020ம் ஆண்டு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முடிந்து 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மதுரை சிறையில் அடைக்கப்பட்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 400 மதிப்பெண் பெற்று, ஐ.டிஐ படிப்பதற்காக திருச்சி மத்திய சிறைக்கு 6 மாதங்களுக்கு முன்பு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று சிறையறையில் இருந்த ஹரிஹரசுதனை சிறை துணை ஜெயிலர் மணிகண்டன் மற்றும் பழனி இருவரும் ஷூ காலால் மிதித்து நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், இருட்டு அறையில் வைத்து உணவு வழங்காமல் சித்ரவதை செய்து வந்துள்ளனர். ஹரிஹரசுதனை ஜெயிலர்கள் தாக்கியது குறித்து மற்றொரு கைதி தனது மனைவியுடன் தொலைப்பேசியில் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகன் சித்ரவதை செய்யப்படுவதை அறிந்த ஹரிஹரசுதனின் தாயார் அங்கம்மாள் தனது மகனைப் பார்க்க மனு போட்டும், உரிய பதிலளிக்கவில்லை என்றும், தனது மகன் என்ன நிலையில் உள்ளான் என்பது கூட தெரியவில்லை என வேதனையுடன் கூறினார். எப்படியாவது மகனை கண்ணில் காட்டுங்கள் என அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். மேலும், துணை ஜெயிலர் மணிகண்டன், ஜெயிலர் பழனி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்ககோரி கே.கே நகர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய வழக்கறிஞர் ஜெயகணேசன், கடந்த திங்கட்கிழமை ஹரிஹரசுதனை பார்க்கும்போது, உடல் முழுவதும் ரத்தகாயங்கள் இருந்ததாகவும், பெற்றோரை கூட சந்திக்க சிறைத்துறை மறுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும்,
திருப்புவனம் அஜித்குமாருக்கு நேரிட்ட கதி ஹரிஹரசுதனுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவலர்களால் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் திருச்சி சிறையில் இளைஞர் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது.