RTE எனப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 2025–26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட நிதியை அண்மையில் விடுவித்தது. இதன் தொடர்ச்சியாக 2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் 25 சதவீத சேர்க்கை நடைமுறைகள் தமிழ்நாடு RTE விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அட்டவணையும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 6ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை பதிவு நடைமுறை மேற்கொள்ளப்பட்டு 14ஆம் தேதி தகுதி பெற்ற மாணவர்களின் பட்டியல் வெளியிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.