சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்வதற்கான இ-டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள், சாலை பணிகள், தண்ணீர் தொட்டி கட்டுதல் போன்ற பணிகளுக்கு டெண்டர் விடப்படுவது வழக்கம். இந்நிலையில், சென்னை மாநகராட்சி விதிமுறைகளை மீறி, 14 சிறிய அளவிலான டெண்டர்களை வெறும் 24 மணிநேர அவகாசத்தில் அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பூங்கா சீரமைப்பு, வகுப்பறை கட்டுமானம், சாலை புனரமைப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குழாய்கள் பொருத்துதல் போன்ற பணிகளுக்கான இந்த டெண்டர்களின் மொத்த மதிப்பு 1 கோடியே 60 லட்சம் ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகள் 2000-இன்படி, ஒப்பந்ததாரர்கள் டெண்டர்களைப் பார்வையிட்டு விண்ணப்பிக்க குறைந்தது 21 முதல் 90 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்பட வேண்டும். குறுகிய கால டெண்டர்கள் குறைந்தபட்சம் 15 நாட்களுக்குத் திறந்திருக்க வேண்டும். ஆனால், சென்னை மாநகராட்சி புதன்கிழமை மதியம் 1.30 மணிக்கு டெண்டர்களை அறிவித்து, அடுத்த நாள் பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவகாசம் அளித்திருக்கிறது. ஆனால், டெண்டர்கள் விடப்பட்ட 3 மணி நேரத்திற்குள்ளேயே அவை மூடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சி இ-டெண்டர் முறையில் முறைகேடு செய்வதாகவும், திமுகவினருக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர் தரப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இ-டெண்டர் முறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் பலரும் பங்கேற்க முடியாதல் சூழல் நிலவுவதாக ஒப்பந்ததாரர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அண்மை காலமாக சென்னை மாநகராட்சி நடத்தும் இடெண்டர் முறையில் வெளிப்படை தன்மையில்லை எனவும், டெண்டர்களில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபவதாகவும் ஒப்பந்ததாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சாமானியர்களுக்கு தரமான சாலை வசதி, குடிநீர் தொட்டி, பூங்கா, வகுப்பறை உள்ளிட்ட பல வசதிகளை செய்யவே மக்களின் வரிப்பணம் பயன்படுத்த வேண்டுமே தவிர அது கொள்ளையடிப்பதற்கு அல்ல என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் விளம்பர திமுக ஆட்சியில் மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த முறைகேடு குறித்து சென்னை மேயரோ, மாநகராட்சி ஆணையரோ எந்த விளக்கமும் அளிக்காமல் இருப்பது மக்களிடையே பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது.