எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லையில் கவின்குமார் என்ற ஐடி ஊழியர், சுபாஷினி என்ற பெண்ணை காதலித்ததால், அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித் வெட்டிக்கொலை செய்தார். பட்டியல் சமூகத்தை சேர்ந்த கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், தனக்கும் கவினுக்கும் இடையேயான உறவு தங்கள் இருவருக்கு மட்டும் தான் தெரியும் என்றும், தங்கள் உறவு குறித்து யாரும் பேச வேண்டாம் எனவும் கூறியுள்ளார். மேலும், கவினின் கொலைக்கும், தனது பெற்றோர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர்களை தண்டிக்க வேண்டும் என நினைக்க வேண்டாம், அவர்களை விட்டுவிடுங்கள் எனவும் சுபாஷினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தானும் கவினும் உண்மையாக காதலித்ததாகவும், செட்டிலாக கொஞ்சம் காலம் தேவைப்பட்டதாக கூறியுள்ள சுபாஷினி, கடந்த மே 30ஆம் தேதி கவினும், தனது சகோதரர் சுர்ஜித்தும் சந்தித்துத் பேசிக்கொண்டதாகவும், என்ன பேசினர் என்பது குறித்து தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சுர்ஜித் தனது காதல் விவகாரத்தை பெற்றோரிடம் சொன்னதாகவும், தன்னிடம் தந்தை கேட்ட போது, கவின் 6 மாதம் நேரம் கேட்டிருந்ததால் தான் காதலிக்கவில்லை என சொன்னதாக தெரிவித்துள்ளார்.
கவின் ஆணவக்கொலை விவகாரத்தில் முதல் குற்றவாளியான சுர்ஜித் மற்றும் அவரது தந்தையும், உதவி ஆய்வாளருமான சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரது தாய் கிருஷ்ணகுமாரியையும் கைது செய்ய கோரி, கவினின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கவினை சுபாஷினி காதலிக்கவில்லை என ஏற்கனவே தகவல் பரவிய நிலையில், தற்போது அவரே வீடியோ வெளியிட்டு, காதலித்ததை உறுதிப்படுத்தி இருப்பதும், கொலையில் பெற்றோருக்கு தொடர்பில்லை என கூறியிருப்பதும், இவ்வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.