கரூர் துயரம் : சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தது ஐகோர்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கவும், அதுவரை எந்த கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்கவும் கோரி, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச். தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், வீடியோக்களை பார்க்கும் போது மிகுந்த வேதனை ஏற்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அனைத்தையும் அனுமதித்துள்ளீர்கள் என அரசின் நடவடிக்கைக்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

காவல்துறை கண்மூடிக் கொண்டிருக்க முடியாது என்றும் காவல்துறை கை கழுவி விட்டதா? - நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ? - பேருந்து மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள் என அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்குப்பதிவு செய்து, பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என காட்டமாக தெரிவித்தார். 

கரூர் சம்பவம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று கூறிய நீதிபதி, கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டார். 

வழக்கு தொடரான ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு வசம் ஒப்படைக்க, கரூர் போலீசாருக்கு உத்தரவிட்டு நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

Night
Day