எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து திட்டமிட்ட சதி என விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கரமாக விபத்து ஏற்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 13 பெட்டிகள் வரை தடம்புரண்டு, சுமார் 20 பயணிகள் படுகாயமடைந்தனர். இதனிடையே, ரயில்வே துறை விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், கவரப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில், பாக்மதி எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மீது மோதியது எந்தவொரு உபகரணங்கள், சிக்னல்கள் திடீர் செயலிழப்பு காரணமாக அல்ல, மாறாக தண்டவாளத்தை மாற்றி அமைத்தது தான் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், வலுக்கட்டாயமாக மாற்றியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், குறிப்பாக தண்டவாள இடைப்பூட்டு அமைப்பின் கூறுகளை வலுக்கட்டாயமாக அகற்றியதால் ஏற்பட்ட நாசவேலையின் விளைவாகும் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இந்த விபத்து நாசவேலை பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பாக்மதி ரயிலின் லோகோ பைலட் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்துவதில் சிறந்த விழிப்புணர்வையும், உடனடித் தன்மையையும் காட்டியதாகவும், இது ரயிலின் வேகத்தையும் அதன் விளைவாக ஏற்பட்ட மோதலின் தாக்கத்தையும் குறைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.