எழுத்தின் அளவு: அ+ அ- அ
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வலிப்பு நோய் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்புக்கு அளவுக்கு அதிகமான மருந்து கொடுத்ததே காரணம் என பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை அருகே சின்னக்குப்பத்தை சேர்ந்த தனலட்சுமி-ஏழுமலை தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், சிடி ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டு மூளை நரம்பில் பாதிப்பு இருக்கலாம் என கூறி குழந்தைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்குமாறு கூறியுள்ளனர்.
அப்போது, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காக குழந்தைக்கு 3 முறை மயக்க மருந்து அளவுக்கு அதிகமாக கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் சுயநினைவை இழந்த குழந்தையை, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்காமல், பயிற்சி மருத்துவரின் இருசக்கர வாகனத்தில் தாயுடன் கள்ளக்குறிச்சி நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அங்கு அனுமதித்தபோது குழந்தை உயிரிழந்து விட்டதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக மருந்து கொடுத்ததும், ஆம்புலன்ஸ் வசதி கூட செய்து தராமல் மற்ற வாகனத்தில் கொண்டு சென்றதாலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக குழந்தையின் தாய் கண்ணீர் மல்க கூறினார்.