வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அறந்தாங்கி அருகே, கர்ப்பிணி பெண்ணிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கை இல்லாத தம்பதியினரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெரிய செங்கீரை கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜசேகர்-அபிராமி தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே குழந்தை பிறந்து மூன்று மாதத்தில் உயிரிழந்த நிலையில், அபிராமி மீண்டும் கருவுற்று இருக்கிறார். இதனையடுத்து தம்பதியினர் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவெடுத்துள்ளனர். எனவே, அபிராமி கருவுற்று இருப்பது குறித்து, வட்டார மருத்துவ அலுவலர், ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர்,  சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட சுகாதாரத்துறையினருக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர்.  

இந்த நிலையில் அபிராமிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்த அவரது குடும்பத்தினர், வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அபிராமிக்கு சுகப்பிரசவம் ஆன நிலையில், பிறந்த சிலமணி நேரங்களிலேயே குழந்தை இறந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதோடு, அபிராமியை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த தகவலையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கையில்லாத காரணத்தால், வீட்டிலேயே மருத்துவம் பார்த்துள்ளனர். அதற்கான உபகரணங்களை கூகுள் மூலம் தேர்வு செய்து வாங்கி, மாமியாரும், கணவரும் சேர்ந்து பிரசவம் பார்த்துள்ளனர். இதனால் பிறந்த சில மணி நேரங்களிலேயே குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. 

பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என்ற நிலையில், சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பொதுவாக பெண் கருவுற்ற நாள் முதல் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகினால் உரிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும், குழந்தை மற்றும் தாய்க்கு தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகள், பரிசோதனைகள் உள்ளிட்டவை முறையாக மேற்கொள்ளப்பட்டு ஆரோக்கியமாக குழந்தை பிறக்க போதிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படி இருக்க, போதிய விழிப்புணர்வு இல்லாமல், வீட்டில் பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தையின் உயிர் அநியாயமாக பறிபோய் உள்ளது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 

Night
Day