விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து : ஒருவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 200 ரூபாய் தினக்கூலிக்காகச் சென்று கரிக்கட்டையான தொழிலாளர்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே குண்டாயிருப்பு கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வின்னர் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் காலையில் 35 பட்டாசு தயாரிப்பு அறைகளில் 74 பட்டாசு தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டனர். அப்போது ரசாயன கலவையில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது ஏற்பட்ட உராய்வின் காரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அடுத்தடுத்து ஐந்து பட்டாசு தயாரிப்பு அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாகின.

தகவலறிந்து சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடுபாடுகளிடையே சிக்கிய பட்டாசு தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உடல் கருகிய நிலையிலும் சிதறிய நிலையிலும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது, பட்டாசு ஆலை அருகே குவிந்த தொழிலாளர்களின் உறவினர்கள், உடல்களை பார்த்து கதறி அழுதது அனைவரையும் கலங்க செய்தது.

இதனிடையே விபத்தில் 70 சதவீதம் தீக்காயமடைந்த 2 ஆண் தொழிலாளர்கள் மற்றும் ஒரு பெண் தொழிலாளி ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், 2 ஆண் தொழிலாளர்கள், சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே, சடலமாக மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்ற நிலையில், பட்டாசு வெடிவிபத்தில் ஆறு ஆண்கள், நான்கு பெண்கள் என பத்து பேர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

அதன்படி திருவேங்கடபுரம் காலனியை சேர்ந்த அவ்வைராஜ், கிளியம்பட்டியை சேர்ந்த ரமேஷ்பாண்டி, கருப்பசாமி, கீழான்மறை நாடு பகுதியை சேர்ந்த முத்து, குருசாமி, முனியசாமி ஆகிய ஆண் தொழிலாளர்களும், 

வெம்பக்கோட்டையை சேர்ந்த சாந்த ரூபி, ராமுத்தேவன்பட்டியை சேர்ந்த முருகஜோதி, ஆலங்குளத்தை சேர்ந்த அம்பிகா, ஜெயா ஆகிய 4 பெண் தொழிலாளர்களும் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது.

சம்பவ இடத்தில் வெம்பக்கோட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலங்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் மருந்து கலவையின் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டதும், அளவுக்கு அதிகமாக பட்டாசு வெடி பொருட்கள் இருப்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குறைந்த தினக்கூலியில் உடல் வெந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் என்பதுதான் சோகம்.. அதிக ஆபத்து உள்ள வெடிமருந்து கலவை செய்யும் தொழிளார்கள் உட்பட வெகு சிலருக்கு மட்டுமே தினக்கூலியாக ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் - மற்ற தொழிலாளர்களுக்கு, தாங்கள் ஈடுபடும் வேலைக்கு ஏற்ப 200 ரூபாய் முதல்  500 ரூபாய் வரை மட்டுமே தினக்கூலியாக கிடைக்கும் - இதனால், வாரத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெரும்பான்மையான தொழிலாளர்கள் கூலியாக பெற்ற வருகின்றனர். அதேநேரம், 200 ரூபாய் தினக்கூலிக்காக வெந்து மடியும் தொழிலாளர்களின் நிலைதான் தற்போது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

தங்கள் வாழ்வாதார தேவைகளுக்காக ஆபத்து நிறைந்த வேலையில் ஈடுபட்டு சொற்ப வருமானத்தை ஈட்டி வரும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க உரிய  நடவடிக்களை எடுப்பதோடு, பட்டாசு தொழிலாளர் நல வாரியத்தில் அவர்கள் அனைவரையும், உறுப்பினர்களாக சேர்த்து அதன் பலன்கள் முழுமையாக கிடைக்கவும், பட்டாசு தயாரிப்பில் போதிய பயிற்சிகளை அளிக்கவும், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனிடையே, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால், போர்மேன் சுரேஷ்குமார் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போர்மேன் சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார், ஆலை உரிமையாளர் மற்றும் மேலாளரை தேடி வருகின்றனர். 


Night
Day