எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர், போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது கால்வாயில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்திற்குட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்த மூன்தினேஷ், அஜித்கண்ணா, பிரகாஷ் ஆகிய 3 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 3 பேரையும் வண்டியூர் அம்மா திடல் அருகே உள்ள புறக்காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை செய்த பின்னர் அண்ணா நகர் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது, மூன்தினேஷ் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பித்து ஓடி வண்டியூர் கால்வாயில் குதித்துள்ளார். இதில் கால்வாய் சகதியில் சிக்கிய அவர், வெளியே வரமுடியாமல் உயிரிழந்ததாக தெரிகிறது. தகவல் அறிந்து வந்த தியணைப்புத்துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மூன் தினேஷின் மரணத்திற்கு நீதி கேட்டு அண்ணாநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் மற்றும் தினேஷின் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரபப்பு நிலவியது.