எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரோடு மாவட்டம் பவானி அருகே மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை கொலை செய்த தாய், சகோதரர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வயிற்றை பிளந்து கருங்கல் கட்டப்பட்ட நிலையில், சடலம் மீட்கப்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜல்லிக்கல்மேடு மயானம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில், கடந்த 13ஆம் தேதி அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பார்த்த போது நெஞ்சுப் பகுதியில் கருங்கல் கட்டப்பட்டும், வயிற்றை பிளந்து கற்கள் சொருகப்பட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இரண்டு நாட்களுக்கு மேலான சடலம் என்பதால் முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்து போயிருந்தது. இதன் காரணமாக இறந்த நபர் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.
அப்போது, இறந்த நபரின் உடலில் இரண்டு இடங்களில் டாட்டூக்கள் குத்தப்பட்டிருந்ததை குற்றப்பிரிவு போலீசார் கவனித்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் குற்றப் பின்னணியில் உள்ள நபர்கள் பட்டியலில் டாட்டூவை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தான் கொலை செய்யப்பட்ட நபர் பவானி அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்த மதியழகன் என்பது தெரியவந்தது.
விசாரணையில் மதியழகன் கார் ஓட்டுநராகவும், கறிக்கடை வைத்து தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது. பவானியை சேர்ந்த கிருத்திகா என்பவரை, மதியழகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்ததாகவும், அவரின் கொடுமையால் கிருத்திகா தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டதாகவும், இவ்வழக்கில் மதியழகன், அவரின் தாய் சுதா உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து மதியழகன் தனது தாய் சுதா மற்றும் சகோதரா் முருகானந்தத்தை மதுபோதையில் அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும், இது குறித்து கிருத்திகாவின் சகோதரா் யோகேஷ், மதியழகனின் நண்பா் கௌரிசங்கா் ஆகியோரிடம் சுதா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தன்னை சிக்க வைத்ததால் கெளரிசங்கர், கிருத்திகாவின் சகோதரர் யோகேஷ், உறவினர் சக்தி பாண்டி ஆகியோர் மதியழகன் மீது கடும் கோபத்தில் இருந்து வந்ததும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து 5 பேரும் சேர்ந்து, மதியழகனை தொட்டிப்பாளையத்தில் உள்ள வீட்டில் கடந்த 11ம் தேதி கொலை செய்து, இரவோடு, இரவாக ஆம்னி காரில் ஏற்றிக் கொண்டு ஜல்லிக்கல் மேடு பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு, மதியழகனின் வயிற்றை கிழித்து ஜல்லிக்கல்லை கொட்டி, கருங்கல்லை நெஞ்சுப்பகுதியில் வைத்து கட்டி காவிரி ஆற்றில் வீசி விட்டு அவரவர் வீட்டிற்கு சென்றதும் விசாரணையில் அம்பலமானது.
தொடர்ந்து ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த பவானி போலீசார் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குடிபோதையில் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தனது மற்றொரு மகன் மற்றும் உறவினர்களை வைத்து தாய் கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் பவானி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.