எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை வடபழநியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைர வியாபாரியை தாக்கி கட்டிப்போட்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற வைர வியாபாரி இடைத்தரகர் ஆரோக்கிய ராஜ் என்பவரிடம் வைரங்களை விற்றுத் தருமாறு கேட்டுள்ளார். இதனால் வைரங்களை வாங்குவதற்காக ராகுல் என்பவரை ஆரோக்கியராஜ் அழைத்து வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திரசேகர் வீட்டில் வைரங்களை வாங்க வந்தவர்கள் நேரில் வந்து பார்த்து விலைகளை உறுதி செய்துள்ளனர். பின்னர் திட்டமிட்டபடி, வைரங்களை சென்னை வடபழநியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விற்பதற்காக எடுத்து வந்த சந்திரசேகரை நான்கு பேர் சரமாரியாக தாக்கி அறையிலேயே கட்டிப் போட்டு வைரங்களை எடுத்து சென்றனர். கட்டிப்போடப்பட்ட நிலையில் கிடந்த வைர வியாபாரி சந்திரசேகரை ஓட்டல் ஊழியர்கள் மீட்டனர்.
இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இரண்டு தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வைரத்துடன் தப்பி தூத்துக்குடிக்கு சென்ற 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜான் லாயர், விஜய், ரத்தீஷ், அருண் பாண்டியராஜன் ஆகிய நான்கு பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.