எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை யாகப்பாநகரை சேர்ந்த பட்டியலின இளைஞர் தினேஷ்குமாரை, அண்ணாநகர் காவல்நிலைய போலீசார், கடந்த வியாழக்கிழமை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிச்சென்ற தினேஷ்குமார், வண்டியூர் வாய்க்காலில் குதித்து, நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தினேஷ்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி பெற்றோர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரேஷ் பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா, தொடர்ச்சியாக பட்டியலின மக்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
எனவே, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும், ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா மீது பட்டியலின வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
அப்போது அரசு தரப்பில், இது காவல்நிலைய மரணம் அல்ல, விசாரணைக்கு பின் வெளியே அழைத்துச் செல்லும் போது, இந்த அசம்பாவிதம் நடைபெற்று இருப்பதாகவும், விசாரணை முதல்கட்டத்தில் இருப்பதால், பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்பொழுது நீதிபதிகள், அண்ணாநகர் காவல் நிலையத்தில் சிசிடிவி முறையாக செயல்படுகிறதா என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, காவல் நிலைய ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கும் சூழலில், இந்த வழக்கை சம்பந்தப்பட்ட காவல் நிலையம் விசாரணை செய்தால் எவ்வாறு நீதி கிடைக்கும் என்று வினவினர்.
தொடர்ந்து, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். இதையடுத்து, தினேஷ்குமாரின் உடலை, உச்சநீதிமன்ற உத்தரவின் படி, உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.