எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வரும் 16ம் தேதியிலிருந்து 18ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் பேட்டி அளித்த இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா, தென்மேற்கு பருவமழை வரும் 17ம் தேதி விலகுவதாக தெரிவித்தார். தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 16ம் தேதியில் இருந்து 18ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று தெரிவித்தார். மேலும் வட மாவட்டங்களில் இயல்பாகவும் இயல்பை விட அதிகமாகவும், தென் மாவட்டங்களில் இயல்பாகவும் இயல்பை விட குறைவாகவும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். அக்டோபர் நவம்பர் டிசம்பர் வரை 92 நாட்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்றும் அமுதா தெரிவித்தார்.
அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரியில் மிகக்கனமழை பெய்யும் என்றும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அமுதா தெரிவித்தார்.