நெடுஞ்சாலையில் வசூல் வேட்டை... 6 போலீசார் இடமாற்றம்... பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கைது...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வாகனங்களை வழிமறித்து லஞ்சம் வாங்கிய காவல்துறையினர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், பணத்தை வசூலித்து கொடுத்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நடத்திய வசூல் வேட்டை குறித்து விரிவாக காணலாம்...

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் ஏலூபட்டி என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடி அருகே, இரவு நேரத்தில் ரோந்து வாகனத்தில் வந்த போலீசார் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என கூறப்படும் இளைஞர் ஒருவர்  அவ்வழியே செல்லும் வாகனங்களை வழிமறித்து வசூல் வேட்டை நடத்தியதாக புகார் எழுந்தது. மேலும், வாகனங்களை வழிமறித்து லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வேகமாக பரவின. 

அவ்வழியே வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர், போலீசாரிடம் ஆங்காங்கே வாகனங்களை வழிமறித்து லஞ்சம் வாங்கினால் நாங்கள் என்ன செய்வது என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் எனக் கூறிக்கொண்டு ரோந்து போலீசாருடன் நின்றிருந்த இளைஞரை உங்கள் அடையாய அட்டை எங்கே என்று கேட்ட போது, அடையாள அட்டை இன்னும் வழங்கப்படவில்லை என அந்த நபர் கூறி அதிர வைத்தார்.  

அந்த நபரை வாகன ஓட்டிகளிடம் பணத்தை வசூலிக்க போலீசார் பயன்படுத்திக்கொண்டதும் தெரிவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார்,   தொட்டியம் காட்டுப்புத்தூர் பகுதியில் ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த வடிவேல் மற்றும்  செல்வம் ஆகிய இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்களையும், தலைமை காவலர் பாலச்சந்திரன், முதன்மை காவலர் சாந்தமூர்த்தி, காவலர்கள் நந்தகுமார், அண்ணாமலை என  மொத்தம் ஆறு காவல்துறையினரை  கூண்டோடு ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டார். 

மேலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என கூறிக்கொண்டு, திருச்சி நாமக்கல் சாலையில் வாகனங்களை மறித்து பணம் வசூல் செய்த முசிறி தா.பேட்டையை சேர்ந்த ராஜ்கமல் என்பவரையும் காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் வரும் வாகனங்களை வழிமறித்து போலீசார் வசூல் வேட்டை நடத்தியதும், அதற்கு உடந்தையாக இருந்த,  பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் எனக் கூறிக்கொண்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

varient
Night
Day